திரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்

1368

1938 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி மகாராஷ்ட்ரா மாநிலம் மாத்தெரானில் பிறந்தவர் கிரிஷ் கர்னாட். அவரது துவக்கப் பள்ளிப்படிப்பை, மராத்தியில் துவக்கினார். கர்னாட் ஒரு இளைஞராக, அவரது கிராமத்தில் நடத்தப்படும் யாக் ஷங்கனாவின் தீவிரமான ஆர்வலராக இருந்தார்.


சிறுவயதிலிருந்தே எழுத்திலும், வாசிப்பிலும் தீவிர ஆர்வம் கொண்ட அவர், கன்னட மொழியின் எழுத்தாளராக உருவெடுத்தார். எழுத்து மட்டுமல்லாது அவருடைய ஆர்வம் சினிமாவிலும் தொற்றிக்கொண்டது.

ஆரம்பக்காலத்தில் நாடகங்களில் நடித்து காலப்போக்கில் நாடக ஆசிரியராக மாறினார். சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்த கிரிஷ் கர்னாட், திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்தார்.

24, தனம்,செல்லமே,ஹே ராம், காதல் மன்னன், காதலன் ,குணா ஆகிய படங்களில் நடித்த கிரிஷ் கர்னாட் கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்தும், பல படங்களை இயக்கியும் உள்ளார்.


கன்னட மொழியின் தற்காலத்திய எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனராக வலம் வந்த கிரிஷ் கர்னாட், கன்னடத்திற்கான ஞானபீட விருதை பெற்றார்.

1970 ஆம் ஆண்டு சமஸ்காரா படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது (தங்கத் தாமரை)

1972 ஆம் ஆண்டு சிறந்த இயக்கத்திற்கான தேசியத் திரைப்பட விருது

1978 ஆம் ஆண்டு பூமிகா படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசியத் திரைப்பட விருது

1979 ஆம் ஆண்டு பிலிம்ஃபேர் சிறந்த திரைக்கதை விருது

1980 ஆம் ஆண்டு பிலிம்ஃபேர் சிறந்த துணைநடிகர் விருது

1982 ஆம் ஆண்டு பிலிம்ஃபேர் சிறந்த துணைநடிகர் விருது

1989 ஆம் ஆண்டு கனகா புரந்தரா என்ற சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது

2000 ஆம் ஆண்டு கன்னூரு ஹெக்கடத்தி என்ற கன்னட படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது என பல விருதுகளை பெற்றார் கிரிஷ் கர்னாட்.

சினிமா,எழுத்தாளர் என கலைகளில் தலை சிறந்து விளங்கிய கிரிஷ் கர்னாட் பல்வேறு மக்கள் போராட்டங்களிலும் பங்கேற்றார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டித்து போராட்டம்,

தொடர்ந்து இந்துத்துவ அமைப்பினருக்கு எதிராக எழுதியும் பிரச்சாரமும் மேற்கொண்டு வந்த எழுத்தாளர் கல்புர்கி கொலையை கண்டித்து போராட்டம்,

எழுத்தாளர் கௌரி லங்கேஷ் கொலையை கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் முன்னின்றவர் கிரிஷ் கர்னாட்.

“ME TOO URBAN NAXAL”(நானும் அர்பன் நக்சல் தான்) என்னும் முழக்கத்தில் பதாகையை கழுத்தில் தொங்க விட்டு கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கௌரி லங்கேஷின் முதலமாண்டு நினைவஞ்சலி கூட்டத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் கிரிஷ் கர்னாட்.


சினிமா மற்றும் எழுத்துலகில் தனக்கென தனி முத்திரை பதித்த கிரிஷ் கர்னாட், சுதந்திர போராட்ட தியாகி திப்பு சுல்தானின் பெயரை பெங்களூர் விமான நிலையத்திற்கு சூட்ட கோரினார். இதனால் ஆர்.எஸ்.எஸ். பாஜக வினர் கிரிஷ் கர்னாடை கண்டித்து போராட்டம் நடத்தினர்.


இப்படி திரையுலகிலும், எழுத்துலகிலும் தவிர்க்கமுடியாத நபராக மாறிய கிரிஷ் கர்னாட்-ன் வாழ்க்கை கடைசி வரை போராட்டக் களத்திலேயே முடிந்தது என்றால் அதை யாராலும் மறுக்கமுடியாது. அப்படிப்பட்டவர் 2019 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி இவ்வுலகை விட்டு நீங்கா விடைபெற்றார்.

கிரிஷ் கர்னாடின் இழப்பு திரையுலகிற்கும் எழுத்துலகிற்கும் ஈடு செய்யமுடியாத ஒன்று.. அவருக்காக அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரின் மறைவை RIP யோடு முடித்துவிடாமல் அவரது பெருமையை உலகிற்கு கொண்டு செல்வோம்…