ஐ.எம்.எப். சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் நியமனம்

1211

புதுடெல்லி: ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்தியரான கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எம்.எப்., தலைமை பொருளாதார ஆலோசகராக உள்ள மவுரி ஆப்ஸ்ட்பில்டின் பதவி காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து
அப்பதவிக்கு இந்தியரான கீதா கோபிநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் கீதா,
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர்.

டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பி.ஏ. பட்டமும், டெல்லி ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டமும் பெற்றார். கடந்த 2016ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்ட கீதா கோபிநாத், பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் பாஸ்டன், பெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் நியூயார்க் உள்ளிட்ட வங்கிகளின் பொருளாதார ஆலோசனை குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு பிறகு ஐ.எம்.எப் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படும் இரண்டாவது இந்தியர் கீதா கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement