அமெரிக்காவில் ஏற்பட்ட கார் விபத்தில் ஆந்திர கல்வி நிறுவனர் உயிரிழப்பு

280

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜியின் நிறுவனருமான எம்.வி.வி.எஸ் மூர்த்தி (76) அமெரிக்காவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முன்னாள் மாணவர்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள எம்.வி.வி.எஸ் மூர்த்தி, கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்று இருந்தார்.

இந்நிலையில் அலஸ்கா மாகாணத்தில் உள்ள வனவிலங்குகள் சரணாலயம் ஒன்றை பார்வையிட சென்ற போது, டிரக்கும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி, உயிரிழந்ததாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் அவருடன் பயணம் செய்த நான்கு பேரில் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே உயிரிழந்த எம்.வி.வி.எஸ் மூர்த்தியின் உடலை, இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியில் அமெரிக்காவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த எம்.வி.வி.எஸ் மூர்த்தி, தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரான என்.டி ராமராவுக்கு மிகவும் நெருக்கமானர் ஆவார். இந்நிலையில் எம்.வி.வி.எஸ் மூர்த்தி மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் கே ஈ கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here