கீரம்பூர் சுங்கச் சாவடி அருகே ரூ.3.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்

368

நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட கீரம்பூர் அருகேயுள்ள ராசாம்பாளையம் சுங்கச் சாவடிப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.50 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.ராசாம்பாளையம் சுங்கச் சாவடி பகுதியில் பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த செங்கோடன் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் திங்கள்கிழமை அதிகாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சேலத்தில் இருந்து மதுரையை நோக்கி சென்ற ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் காரில் இருந்த இரண்டு சாக்கு மூட்டைகள், ஒரு பையில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான சுமார் 8 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

இதில் 7 கிலோ தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய ஆவணம் இருந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்த விசாரணையில் சேலத்தில் தங்க நகைகள் தயாரித்து மதுரை  திருநெல்வேலி  தூத்துக்குடி  நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு தனியார் கொரியர் சர்வீஸ் மூலம் ஆம்னி வேனில் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என்றும் கொரியர் நிறுவனமானது நகைக்குரிய எடையை ரசீதில் பதிவு செய்யாமல் பேக்கிங் எடையையும் சேர்த்து பதிவு செய்ததால் ரூ.3.45 கோடி மதிப்பிலான 7 கிலோ நகை என்பது 8 கிலோ என பதிவானது என்றும் தெரியவந்தது.

இதையடுத்து, தடையில்லாச் சான்று அளித்துவிட்டு, நகைகளை வாங்கிச் செல்லுமாறு வருமானவரித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.