மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு குண்டர் சட்டம்

544

மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் வகையில் இரண்டு வாரங்களில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

மணல் கொள்ளை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ராமதிலகம் அடங்கிய அமர்வு, அடுத்த மாதம் 3-ம் தேதிக்குள் இந்த சுற்றறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும் என எச்சரித்தது.

அப்போது ஆஜரான மாநில குற்றவியல் அரசு வழக்கறிஞர், இது சம்பந்தமாக வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே சட்டத்தில் உள்ள விதி அமல்படுத்துவதற்கு எதற்கு இவ்வளவு நீண்ட நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதும் குற்றம் தான் என்றும் உடந்தையாக இருப்பவர்களை தண்டிக்காமல் இருக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

மணல் கடத்தலையும், இதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்து கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், மணல் கடத்தலுக்கு உதவும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கையும், குண்டர் சட்டமும் தேவை என கூறினர்.

மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும், குற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.