டெல்லி வன்முறை : “பாஜக தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – கவுதம் கம்பீர் ஆவேசம்

1070

டெல்லி கலவரத்தில் மக்களை தூண்டுபவர் பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தாலும் அவர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக அமைதியான முறையில் போராட்டம் நடந்து வந்தது.

இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் இந்த குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நடைபெற்ற பேரணியில் மோதல் வெடித்தது. தொடர்ந்து 3 நாட்களாக இந்த கலவரம் தொடர்ந்தது. இந்தக் கலவரத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட போலீஸார், மக்கள் காயமடைந்துள்ளனர்

கலவரத்தில் காயமடைந்த போலீஸார் டெல்லி பத்பார்கஞ்ச் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை வந்தவர்களை இன்று நேரில் சந்தித்து பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் உடல் நலம் விசாரித்தார்.

போலீஸ் துணை ஆணையர் ஷாதரா, அமித் சர்மா, இணை ஆணையர் அனுஜ் ஜெயின், தலைமைக் காவலர் யாஷ்பால் ஆகியோரிடம் கலவரம் தொடர்பாகக் கம்பீர் கேட்டறிந்தார். இதற்கிடையே கலவரத்தில் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ரா பேசுவதாக ஆம் ஆத்மி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன

இந்நிலையில் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்;

”டெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தால்கூட தவறு செய்திருந்தால், மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசியிருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீருடையில் வந்த காவலர்களை இவ்வாறு நடத்தியிருக்கிறார்கள் என்றால், சாதாரண மக்களை எவ்வாறு நடத்துவார்கள். இது என்ன மாதிரியான போராட்டம். மக்களை ஆத்திரமூட்டும் பேச்சுகள் பாஜக சார்பில் யார் பேசியிருந்தாலும் அல்லது ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி என எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லி மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என விரும்புகிறார்கள். ஆதலால், மக்களைத் தூண்டிவிடுவோர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் எனப் பார்க்கக்கூடாது. யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைக்கு நான் ஆதரவு தருகிறேன்”.

இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கபில் மிஸ்ரா தேர்தல் பிரச்சாரத்தின்போது சிஏஏவுக்கு ஆதரவாகப் பேசினார். அதுமட்டுமல்லாமல், ஜாப்ராபாத் பகுதியில் உள்ள மஜ்பூர் சவுக் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களைத் திரட்டுவதற்காக வழிநடத்திச் சென்றவர் கபில் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

சிஏஏவுக்கு ஆதரவாக ஆதரவாளர்களைத் திரட்டியபின்தான் எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் நடந்தது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of