நுழைவுக்கட்டணம் 35 ரூபாய்.. டூ வீலர் பார்க்கிங் செய்ய 50 ரூபாய்.. சென்னை அரசு பொருட்காட்சியில் அநியாய வசூல்..

1675

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சார்பில் சென்னை தீவுத்திடலில் 46-வது இந்தியா சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2020 நடைபெற்றுவருகிறது.


தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து விளக்கும் அரசு அரங்குகள், 100-க்கும் மேற்பட்ட வணிக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறுவர்களுக்கான ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. விடுமுறை தினங்கள் மற்றும் சாதாரண நாட்களில் ஏராளமான மக்கள் குடும்பம் குடும்பமாக கண்காட்சியை பார்வையிட வந்த வண்ணம் உள்ளனர்.

கண்காட்சியை பார்வையிட பெரியவர்களுக்கு 35 ரூபாயும்,சிறியவர்களுக்கு 20 ரூபாயும் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


ஆனால், பார்க்கிங் கட்டணமாக இருசக்கர வாகனத்திற்கு 50 ரூபாயும், காருக்கு நூறு ரூபாயும் அநியாய கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
குழந்தைகளோடு வருபவர்கள் ஒப்பந்தம் எடுத்திருக்கும் குத்தகை காரர்களிடம் என்ன செய்வதென பணத்தை கொடுத்தபடி சென்றுகொண்டுள்ளனர்.

இதே சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியில், அதுவும் தனியார் அமைப்பு நடத்தும் கண்காட்சியில் பார்க்கிங் கட்டணமாக இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாயும், காருக்கு 30 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது.

தமிழக அரசின் சுற்றுலாத்துறை நடத்தும் அரசு பொருட்காட்சியில் நுழைவுக்கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருக்க என்ன காரணமென விசாரித்தோம்.


கடந்த 5 ஆண்டுகளாக தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் FUN WORLD என்ற நிறுவனத்திற்கு ஒட்டு மொத்தமாக ஒப்பந்தம் கொடுத்து விடுகிறது.
எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் அந்த FUN WORLD நிறுவனம் இஷ்டத்திற்கு விலையை உயர்த்தி,பணம் பார்த்து மற்றவர்களுக்கு கைமாற்றி விடுகிறது.

வாகன நிறுத்தத்திற்கான கட்டணத்தை பொறுத்த வரையில் சென்னையில் மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள கட்டணமே வசூலிக்க வேண்டுமென்பது விதி.
ஆனால் அதற்கு,,மாறாக இரு சக்கர வாகனத்தை நிறுத்துவதற்கான கட்டணமே 50 ரூபாய் என்ற ரீதியில் வசூல் வேட்டை நடத்தி கல்லா கட்டி வருகிறார்கள் ஒப்பந்ததாரர்கள்.

ஏன் இவ்வளவு அதிகமாக பார்க்கிங் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதென அறிய,சுற்றுலாத்துறையின் பொது மேலாளர் பாரதி தேவியை தொடர்புகொண்டோம்..
என்னவென விசாரித்து சிறிது நேரத்தில் கூப்பிடுகிறேன் என்றவர்,திரும்ப அழைக்கவே இல்லை.

பொருட்காட்சி அலுவலகத்தை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். தொலைபேசியை எடுத்தவர், தங்களுக்கும்,அதற்கும் சம்பந்தம் இல்லை.ஒப்பந்தம் எடுத்தவர்கள் நிர்ணயிக்கும் தொகை அது.

ஆகையால் சுற்றுலாத்துறைக்கும் பார்க்கிங் கட்டணத்திற்கும் தொடர்பில்லை.இருந்தாலும் என்னவென விசாரிக்கிறோம் என முடித்துக்கொண்டார்..
பொறுப்பான பதிலை சொல்ல ஒருவரும் முன்வரவில்லை.

கொஞ்சம் கூட நியாயமில்லாத கட்டணம் தனியாரால் வசூலிக்கப்படுவது நன்கு தெரிந்தும் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் அதிகாரிகள் என்பதை உணர முடிகிறது.

யாரோ சம்பாதிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் எதற்கு பொருட்காட்சி நடத்துகிறது என்பது தான் புரியவில்லை.

Advertisement