புதுவை கவர்னர் கிரண்பேடி மாற்றமா? – நாராயணசாமி பதில்

542

புதுவை கவர்னர் கிரண்பேடி மாற்றப்படுவாரா என்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்தார்.

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது. அதைத்தொடர்ந்து புதுவை மக்கள் சார்பில் அந்த விழாவில் நான் கலந்துகொண்டேன்.

நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். அவர் புதுவை மாநிலத்தில் திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கவேண்டும். இதுதொடர்பாக அவரையும் மத்திய மந்திரிகளையும் சந்தித்து வலியுறுத்துவேன்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மதச்சார்பற்ற கட்சிகள் டெல்லி சென்று போராட்டம் நடத்தி உள்ளோம். அந்த கோரிக்கையையும் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

புதுவைக்கு அதிக மானியம் வழங்குவது, கடன்தொகையை ரத்து செய்வது 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக நிதி வழங்குவது, மத்திய அரசின் திட்டங்களுக்கு 90 சதவீத நிதி வழங்குவதை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

அவரிடம், சட்டசபை எப்போது கூடுகிறது? புதிய சபாநாயகர் எப்போது தேர்வு செய்யப்படுவார்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, இவை அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

மேலும், கவர்னர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தீர்கள். புதிதாக அமைந்துள்ள அரசிடமும் வலியுறுத்துவீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

Advertisement