சென்னையில் ”கோவிஷீல்டு” தடுப்பூசி பரிசோதனை

522

சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசி 2-வது கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் உள்ள 17 நகரங்களில் இந்த தடுப்பு மருந்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்து மொத்தம் 300 பேரிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

“கோவிஷீல்டு” தடுப்பூசி பரிசோதனை பக்கவிளைவுகளை ஏற்படுத்திய காரணத்தால் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டு உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்ஸ்போர்டு நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு இந்த சோதனையை மீண்டும் தொடங்க ஆக்ஸ்போர்டு நிறுவனம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பரிசோதனையை தொடங்க சீரம் நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் சென்னையில் இந்த தடுப்பூசி சோதனை இந்த மாத இறுதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.