குட்கா ஊழல் தொடர்பாக விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் வீடுகளில் 10 மணிநேரம் சி.பி.ஐ சோதனை

673

குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டவர்களின் வீடுகளில் சுமார் 10 மணிநேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி குட்கா ஊழல் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், நேற்று அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, தமிழக டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா, மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை மாலையில் நிறைவடைந்தது. சுமார் 10 மணிநேரமாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா என்ற தகவல் வெளியாகவில்லை.

தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் சம்பத் வீட்டில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை மற்றும் குண்டுர் உள்ளிட்ட 35 இடங்களில் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.