குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேர் கைது

564

குட்கா ஊழல் தொடர்பாக, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சில முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத்குமார், உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனை நடந்தது.

குட்கா ஊழலில் அதிரடி சோதனையில் இறங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி உள்ளனர். குட்கா ஊழல் தொடர்பாக, இடைத்தரகர்களாக செயல்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார், ஆகிய இரண்டு பேரை, நேற்று காலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மாதவராவிடம் இருந்து லஞ்சப் பணத்தை வாங்கி அதிகாரிகளுக்கு கொடுத்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், மாதவராவின் கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய புள்ளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement