ஓமனில் கடும் கட்டுப்பாடு…. ஒரே ஆண்டில் 65,000 வெளிநாட்டவர்கள் வெளியேறினர்

564

ஒரு வருடத்தில் மட்டும் 65 ஆயிரம் வெளிநாட்டவர்கள் ஓமனை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓமனியமயமாக்கல் தொடர்பான கொள்கைகளால், மே 2018 முதல் மே 2019 வரை 65,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஓமனை விட்டு வெளியேறியுள்ளனர்.

தேசிய புள்ளி விவர மற்றும் தகவல் மையத்தின் (என்.சி.எஸ்.ஐ) தரவுகளின்படி ஓமனில் வசிக்கும் மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2018 மே முதல் 2019 மே வரை 65,397 குறைந்து வெறும் 2,017,432 ஆக உள்ளது.

அதே காலகட்டத்தில் ஓமனியர்களின் எண்ணிக்கை 2,575,132 யிலிருந்து 2,649,857 ஆக உயர்ந்துள்ளது. இது உள்ளூர்வாசிகளின் மக்கள் தொகை அதிகரிப்பை சுட்டிக்காட்டுகிறது.

புதிய கொள்கைகளின் தொடக்க ஆறு மாதங்களில் வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்கான விசாவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், வெளிநாட்டினர் வெளியேறுவது அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக 2019 ஜனவரி முதல் மே வரை 27,000 ஓமனியர்கள் தனியார் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த பன்னிரண்டு மாதங்களில் ஓமனில் இருந்து பல வெளிநாட்டவர்கள் வெளியேறி விட்டதால் வீட்டு வாடகைகள் தரைமட்டத்திற்கு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓமன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக் குழுவின் தலைவர் ஹசன் அல் ருகீஷி கூறுகையில்: மஸ்கட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கும் இடத்திற்கான தேவை குறைந்து விட்டது.

இதனால், வீடு, மற்றும் ஹோட்டல் அறைகளின் வாடகை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சி, அல் மாபெலா மற்றும் அல் அமரத் போன்ற இடங்களில் 60 சதவீதமும், மவேலாவில் 40 சதவீதமும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of