தங்கம் முதலீடு செய்தால் அதிக வட்டி: மோசடி செய்த ஹீரா குழும தலைவர் நவ்ஹீரா சேக் கைது

373
Nowhera Shaik

தங்கம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் பேரை மோசடி செய்த ஹீரா குழும தலைவர் நவ்ஹீரா சேக்கை ஐதராபாத் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஹீரா குழும தலைவர் நவ்ஹீரா சேக்கிற்கு சொந்தமான நிறுவனங்கள் ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம், டெல்லி என 17 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்கள் நிறுவனத்தில் தங்கம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஹீரா குழுமம் அறிவித்தது.

இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் ஹீரா குழுமம் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், அந்நிறுவனத்தின் மீது ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் பல வழக்குகள் உள்ளன.

இந்த வழக்கை விசாரித்து வந்த ஐதராபாத் குற்றப்பிரிவு போலீசார், ஹீரா குழும தலைவர் நவ்ஹீரா சேக்கை டெல்லியில் கைது செய்தனர். விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், ஹீரா குழுமத்திற்கு நாடு முழுவதும் 160 வங்கிக் கணக்குகள் இருப்பதாக தெரிவித்தனர்.

வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தால் முழுமையான விபரங்கள் தெரியவரும் என்று ஐதராபாத் நகர காவல்துறை ஆணையர் அஞ்சனிகுமார் கூறினார்.