ஹெல்மெட், சீட் பெல்ட் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

563

ஹெல்மெட், சீட் பெல்ட் விழிப்புணர்வுக்காக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது அவசியம் எனவும் தெரிவித்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் சாலை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு 2016ஆம் ஆண்டு சுமார் 20 கோடி வரை அபராதம் விதித்திருப்பதாகவும், 2017ஆம் ஆண்டு சுமார் 42 கோடியும், 2018 ஜூலை வரை வரை 15 லட்சமும் அபராதம் விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அறிக்கையை பார்த்த நீதிபதிகள் சட்டத்தை அமலாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளதா? இல்லை நீதிமன்றத்திற்கு உள்ளதா? என கேள்வி எழுப்பினர். ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் என்ற சட்டத்தை அமல்ப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்து விட்டதா? சிக்னல்களில் நோட்டீஸ் வழங்குவது மட்டும் விழிப்புணர்வு ஆகிவிடுமா? என்றும் வினவினர்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் புகைப்படத்திற்கு போஸ் மட்டும் கொடுப்பதா? என கண்டனம் தெரிவித்தனர். முறையான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கி இருந்தால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வழக்குகள் குறைந்திருக்காதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து ஹெல்மெட், சீட் பெல்ட் விழிப்புணர்வுக்காக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.