கொரோனா அச்சுறுத்தல்.. பிரபல ரவுடிக்கு ஜாமீன் மறுப்பு..!

192

கொரோனா தொற்று அச்சுறுத்தலால் சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டும் நிலையில், பல வழக்குகளில் இடைக்கால ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடிக்கு ஒரு மாத பரோல் வழங்க மறுத்துவிட்டது.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விசாரணைக் கைதிகள் ஜாமீனில் விடுதலை ஆகின்றனர். பல தண்டனைக் கைதிகளுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளியாக இருந்த நாகேந்திரன் என்கிற பிரபல ரவுடி , கொலை வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கல்லீரல் பாதிக்கப்பட்ட அவர், 2018-ம் ஆண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார்.

இந்நிலையில், நாகேந்திரன் சிகிச்சை பெறுவதற்காக ஒரு மாத கால பரோல் வழங்கக் கோரி அவரின் மனைவி விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

நாகேந்திரனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் மீதான கொலை வழக்கு விசாரணையில் உள்ளதாகவும், அவருக்கு தேவையான சிகிச்சையை அரசே வழங்கும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், நாகேந்திரனின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் தற்போதைய நிலையில் அவருக்கு பரோல் வழங்க முடியாது என மறுத்துவிட்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of