வட மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை – ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

525

இமாச்சலப் பிரதேசம் : கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், தமிழகத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் குலு மற்றும் காங்ரா உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும்,பீஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த கனமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன.

மழை மற்றும் வெள்ளத்தால் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மணாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் ஓசூர், திருவண்ணாமலை மற்றும் திருச்சியிலிருந்து இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றவர்கள், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஊர் திரும்ப முடியாமல் பெண்கள், குழந்தைகள் உள்பட 70 க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை இமாச்சல பிரதேச அரசு செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளம் வடிந்த பின்னரே அவர்கள் ஊர் திரும்ப முடியும் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் டெல்லி, பஞ்சாப், சத்தீஷ்கார், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.