“மாஸ்க்,கையுறை வழங்குவதில்லை” – குமுறும் துப்புரவு பணியாளர்கள்

350

சென்னை மாநகராட்சி சார்பில் கோடம்பாக்கம், அடையாறு, தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் வீடுவீடாக சென்றுகுப்பைகளை சேகரிப்பது, சாலையை தூய்மைப்படுத்துவது போன்ற பணிகள் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் இருந்து தினமும் 1,500 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் தினமும் அகற்றப்பட்டு வருகின்றன. துப்புரவு பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது சென்னையில் பல இடங்களில் கரோனா பரவி வருகிறது. பல நிறுவனங்களுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசியப் பணிஎன்பதால் துப்புரவுப் பணியாளர்களுக்கு விடுமுறை விடப்படவில்லை. துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் முகக்கவசம், கையுறை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் கோடம்பாக்கம், அடையாறு, தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் சார்பில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் எதுவும் வழங்கவில்லை என குற்றம்சாட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் துப்புரவு தொழிலாளர்கள் கூறியதாவது:

கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். எங்களை கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்று நிறுவனம் வலியுறுத்துகிறது. நாங்களும், மக்கள் நலன் கருதிகுப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆனால், மாநகராட்சியின் நேரடி துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கையுறை, முகக் கவசம் போன்றவை எங்களுக்கு வழங்கப்படவில்லை. மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசு ஊக்கத்தொகை அறிவிக்கிறது.

எங்களுக்கு எதுவும் இல்லை. நாங்களும் அவர்களைப் போல துப்புரவு பணிதான் செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, இப்பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of