யார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..? ஆய்வில் வெளியான தகவல்..!

1444

நீண்ட காலம் ஆரோக்கியமாக, இளமையோடு, எந்த நோயும் இல்லாமல்  வாழ ஒரு அற்புதமான மருந்து உள்ளது. 8 மணி நேரம் நிம்மதியான தூக்கம்தான் அந்த மருந்து. தூக்கமா என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம்.

தூக்கம் தொடர்பான பல ஆய்வு முடிவுகளில் தூக்கக்தை விட சிறந்த மருந்து ஏதும் இல்லை என தெரியவந்திருக்கிறது. சரியாக தூங்கவில்லை என்றால், அறிவாற்றல் பாதிக்கப்படுகிறது. முடிவெடுக்கும் ஆற்றல், திட்டமிடும் ஆற்றல், நினைவாற்றல், கவனம் ஆகியவை தூக்கம் இல்லாததால் பாதிக்கப்படுகிறது.

போதுமான தூக்கமில்லாததால் உடலுக்குத் தேவையான சுரப்பிகளும் ஒழுங்காகச் சுரப்பதில்லை. ஒரு நாளில் 5 மணிநேரத்துக்கும் குறைவாகத் தூங்குவோருக்கு இதய நோய் வரும் அபாயம் மூன்று மடங்கு வரை அதிகரிக்கிறது.   இரவில் தூங்காமல் அதை ஈடுகட்ட பகலில் தூங்குவது இன்று சகஜமாக காணும் சூழலே.

எத்தனை மணி நேரம் பகலில் தூங்கினாலும் அது இரவு தூக்கத்திற்கு ஈடாகாது. இரவில் கண்விழிப்பவர்களுக்கு ”Circadian Rythm” சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒரு நாளைக்கு 7 மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால், ஆயுள் குறையும்.

ஒரு வாரத்துக்கு சரியாகத் தூங்கவில்லை என்றால், 1 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும்.  சிலர் இரவு, பகல் என பாராமல் எப்போதும் தூங்கிகொண்டே இருந்து தூங்குமூஞ்சி என்று பெயர் வாங்குவார்கள்.

ஆய்வுகளின்படி ஒருவர் இரவில் சரியாக 8 மணி நேரம் தூங்கினால், பகலில் தூக்கம் வராது, அதையும் மீறி தூக்கம் வந்தால் அதுவும் குறைபாடு என கூறுகிறது.

மேலும் வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வில் யார் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும் என என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி

பிறந்த குழந்தைகள் ( மூன்று மாதங்கள் வரை)

நாளொன்றுக்கு 14-ல் இருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும். அதேபோல் 19 மணி நேரத்திற்கு மேல் தூங்கவிடக்கூடாது

4 முதல் 11 மாதம் வரை

நாளொன்றுக்கு 12-ல் இருந்து 15 மணி நேரம் வரை தூங்கவேண்டும், குறைந்தது 10 மணி நேரம்வரை தூங்கினாலும் போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது

1 முதல் 2 வயது வரை

தினமும் 11-ல் இருந்து  14 மணி நேரம் வரை தூங்க வேண்டும் . மேலும்16 மணி நேரத்திற்கு மேல் தூங்குவது தவறு

3 முதல் 5 வயது வரை

தினமும் 10 முதல் 13 மணி நேரம் வரை தூங்கவேண்டும்,  8 மணி நேரத்திற்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரத்திற்கு  மேலாகவோ தூங்குவது தவறு

6 முதல் 13 வயது வரை

9 முதல் 11 மணிநேரம் வரை தூங்கவேண்டும். தினமும் 7 மணி நேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணி நேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமற்றது

14 முதல் 17 வயது வரை

8 முதல் 10 மணி நேரம் வரை தூங்கவேண்டும். 11 மணி நேரத்திற்கு மேலாக அல்லது 7 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது தவறு

18 முதல் 25 வயது வரை

7ல் இருந்து 9 மணி நேரம் வரை தூங்கவேண்டும், அதேபோல் 6 மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 11 மணி நேரத்துக்கு மேலாகவோ தூங்கக்கூடாது.

26 முதல் 64 வயது வரை

மேற்கண்ட 18 முதல் 25 வயது வரை உடையவர்கள் தூங்கவேண்டிய நேரமே 26 முதல் 64 வயது வரை  உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

65 வயது முதல் அதற்கு மேல்

ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7ல் இருந்து 8 மணிநேரம் வரை. ஆனால் 5 மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலாகவோ தூங்கக்கூடாது.

இதில் நீங்கள் எந்த வயதுடையவர்கள் என்று தெரிந்து அதற்கேற்ற வகையில் உங்கள் தூக்கத்திற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்கவேண்டுமா, இரவில் நன்றாக தூங்குங்கள்.. உங்கள் ஆரோக்கியத்திற்காக சத்தியம் செய்திக்குழுவுடன் செய்தியாளர் பிரவீண்குமார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of