டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் பலியானவர்கள் எத்தனை பேர்?

294
highcourt

டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து வரும் 20-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என்றும், பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர், இதை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரைகளை இருப்பு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிடக்கோரி இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்?, எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? காய்ச்சலை கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து விரிவான நிலை அறிக்கையை வரும் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத் துறைச் செயலருக்கு உத்தரவிட்டனர்.