“அவளுக்கு அப்பவே ரொம்ப தலைவலி..” உயிரிழந்த மனைவி..! நாடகமாடிய கணவருக்கு மாமனார் வைத்த வேட்டு..!

828

திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு வனிதா என்ற மனைவியும், யோகேஷ்வரன், மாதேஸ்வரன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி அன்று வனிதா உயிரிழந்துள்ளார்.

அவரது உடலை, கணவர் ஏழுமலை, வனிதாவின் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோவிலூர் என்ற கிராமத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார். அங்கு சென்றதும், உறவினர்களிடம் வனிதாவிற்கு அடிக்கடி தலை வலி இருந்துள்ளது. இதன் காரணமாக அவள் உயிரிழந்துவிட்டாள் என்று கூறினார்.

அவரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத வனிதாவின் தந்தை, தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து திருவண்ணாமலை போலீசார், திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து வனிதாவின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூருக்கு அனுப்பிவைத்தனர்.

திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கணவரிடம் விசாரணையை தொடங்கினர். அதில், தனக்கும், தன் மனைவிக்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்து, மனைவியை பூரிக்கட்டையால் தாக்கியதில், அவர் படுகாயமடைந்ததாகவும் எழுமலை தெரிவித்தார்.

மேலும், இந்த காயத்திற்கு, அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பில், மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொடுத்தேன் என்றும், ஆனாலும் தொடர்ந்து வனிதாவிற்கு தலையில் வலியும், அடிக்கடி மயக்கமும் ஏற்பட்ட நிலையில் அவர் திடீரென இறந்து விட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் சொந்த ஊருக்கு மனைவியின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்து மூடி மறைத்து விடலாம் என்று நினைத்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் ஏழுமலை கூறினார்.

இறுதியில் வனிதாவின் தந்தை அளித்த புகரால், ஏழுமலை வசமாய் சிக்கிக்கொண்டார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஏழுமலையை கைது செய்தனர்.