“வேலைக்கு போகச்சொன்னதால் கொன்றேன்!” கர்ப்பிணியை கொன்ற கொடூர கணவன்!

838

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவருக்கும் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடைபெற்ற சில தினங்களிலேயே இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை மாரியப்பனை பார்ப்பதற்கு வந்த அவரது சகோதரி, வீட்டுக்கதவை தட்டியுள்ளார்.

நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்காததால், வீட்டின் சண்ணலை அவர் உடைத்துள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே மாரியப்பனும், அவரது மனைவி சண்முகப்பிரியாவும் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளனர். இதையடுத்து கதவை உடைத்த உள்ளே சென்று பார்த்தபோது மாரியப்பன் கழுத்திலும் கையிலும் வெட்டுக்காயங்களுடன் கிடந்துள்ளார்.

மற்றொரு அறையில் சண்முகப்பிரியா ரத்தக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில், கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பனின் சகோதரி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில்,

“என் மனைவி என்னை வேலைக்குப் போகச் சொல்லி தொந்தரவு கொடுத்து வந்தார். நேற்று இரவிலும் இதே பிரச்னை சம்பந்தமாகச் சண்டை போட்டோம். அந்தத் தகராறில் பழங்கள் வெட்ட வைத்திருந்த கத்தியால் மனைவி சண்முகப்பிரியாவைக் குத்திக் கொலை செய்தேன்.

ஆத்திரத்தில் குத்தியதில் அவள் இறந்துபோனதும் ரொம்ப அழுதேன். என்ன செய்வதுன்னு தெரியாமல் நானும் கத்தியால் கையிலும் கழுத்திலும் கீறினேன். கொஞ்ச நேரத்துல மயக்கமடைஞ்சுட்டேன்”

என்று கூறியுள்ளார்.

உயிரிழந்த சண்முகப்பிரியா கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.