அலறல் சத்தம்.. மனைவியை உயிருடன் எரிக்க முயன்ற கணவன்.. போலீசார் அதிரடி..

464

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள நடுவில் பகுதியை சேர்ந்தவர் 53 வயதான சுரேஷ் ராஜன். அவருக்கு 40 வயதில், ஹெப்சிபாய் என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 15-ஆண்டுகள் கடந்த நிலையிலும், இருவருக்கும் குழந்தை இல்லை.

இந்த குறையை மறைப்பதற்காக, மனைவியின் மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார் சுரேஷ் ராஜன். இந்நிலையில், ஹெப்சிபாய்-க்கு இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக அரசு வேலை கிடைத்துள்ளது.

இதையடுத்து, சுரேஷ் ராஜனின் சந்தேகப்பார்வை இன்னும் அதிகமாகியுள்ளது. மனைவி வேலைக்கு செல்லும்போது, அவரையே பின்தொடரும் சுரேஷ் ராஜன், அவர் யாரிடமெல்லாம் பேசுகிறார் என்பதை மறைந்து நின்று பார்த்து வந்துள்ளார். மேலும், ஹெப்சிபாய் வீட்டிற்கு வந்ததும் அவர்கள் யாரென்று கேட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இவ்வாறு இருக்க, சம்பவத்தன்று, வீட்டில் இருந்து, ஹெப்சிபாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியுள்ளனர். கதவு திறக்கப்டவில்லை. வீட்டில் இருந்து பெட்ரோல் வாடையும் வந்ததால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கதவை உடைத்து அதிரடியாக உள்ளே நுழைந்தனர். வீட்டிற்குள், கத்தி, அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் சுரேஷ் ராஜன் நின்றிருந்தார்.

மேலும், உடல் முழுவதும் கயிற்றால் கட்டப்பட்டும், வாயில் துணியால் அடைக்கப்பட்டும் அவரது மனைவி ஹெப்சிபாய் கிடந்தார். இதையடுத்து, அவரை மீட்ட போலீசார், சுரேஷ் ராஜனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.