ஹைதராபாத் குற்றவாளிகளை சுட்டுத்தள்ளிய “என்கவுண்டர் போலீஸ்”.. 2008-ல் நடந்த அதிரடி ஆப்ரேஷன்..!

899

தெலங்கானா என்கவுன்ட்டரை நடத்திய போலீஸ் அதிகாரி சஜ்ஜனார் கடந்த 2008-ல் இதே போன்றதொரு என்கவுண்டர் ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் நடத்தியது தெரியவந்துள்ளது.

கடந்த 27-ம் தேதி தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்திலேயே முகமது ஆரிஃப் (26), ஜொல்லு சிவா(20), ஜொல்லு நவீன் (20), சிந்தகுந்தா சென்னகேசவலு (20) ஆகிய 4 பேரும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் வி.சி.சஜ்ஜனார் கடந்த 2008-லும் இதே போன்றதொரு என்கவுண்டர் நடத்தியது தெரியவந்துள்ளது.
சஜ்ஜனார் அப்போது வாரங்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தார். டிசம்பர் 2008-ல் பொறியியல் கல்லூரியில் பயின்றுவந்த ஸ்வப்னிகா, பிரனிதா ஆகிய இரண்டு மாணவிகள் மீது மூன்று இளைஞர்கள் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினர்.

இது தொடர்பாக ஸ்ரீநிவாஸ ராவ் (25), ஹரிகிருஷ்ணன் (24), சஞ்சய் (22) ஆகிய மூன்று இளைஞர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

மூவரில் பிரதான நபராக குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்ரீநிவாஸ ராவ் ஸ்வப்னிகாவை காதலித்து வந்துள்ளார். அவரின் காதலை ஸ்வப்னிகா ஏற்றுக் கொள்ளாததால் அவர் மீது ஆசிட் வீசியுள்ளார். இதற்கு மற்ற இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைதான மூவரும் இதேபோல் ஆசிட் வீச்சு நடந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். டிசம்பர் 2008-ல் சம்பவத்தை நடித்துக்காட்ட கூட்டிச் சென்றபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் கூறி என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது. அன்றிலிருந்து அவருக்கு ‘என்கவுண்டர் போலீஸ்’ என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.

தற்போது, அதே காவல் அதிகாரி அதே பாணியில் இன்று (டிச.6) காலையில் அதே போன்றதொரு என்கவுண்டரை நிகழ்த்தியுள்ளார்.

அப்போது வாரங்கல் மாவட்ட மக்கள் சஜ்ஜனாரை கொண்டாடியது போலத்தான் இப்போதும் மக்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

குற்றவாளிகளே என்றாலும் ஜனநாயக நாட்டில் நீதியின் முன் நிறுத்தியே தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.