தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகும் தமக்கு தகுதி இருக்கிறது – கராத்தே தியாகராஜன்

1231

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகும் தமக்கு தகுதி இருக்கிறது என்றும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக செயல்படுவேன் எனவும் கராத்தே தியாகராஜன் கூறியிருப்பது தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்பூசல் வெடித்துள்ளது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

தென் சென்னை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜனின் பிறந்ததினத்தையொட்டி, சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் மற்றும் பேனர்களில், வருங்கால தமிழக காங்கிரஸ் தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சத்தியம் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ள கராத்தே தியாகராஜன், வருகின்ற இடைத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவோடு இனைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை என்றும், ஆனால் கட்சித் தலைவர்கள் பலர் தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸிலும் செயல்தலைவர் பதவிகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறிய கராத்தே தியாகராஜன், தமிழகத்தில் கட்சித் தலைமையில் மாற்றம் வந்தால் தலைவர் பதிவி கேட்பேன் என்றும், அதற்கான தகுதி தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த தலைவர் பதவிக்கான பரிசீலனையில் தனது பெயரும் இருந்ததாகவும் கராத்தே தியாகராஜன் குறிப்பிட்டார். தென் சென்னை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜனின் பேச்சு, தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்பூசல் வெடித்துள்ளது வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளதையே எடுத்துக்காட்டுகிறது.

Advertisement