இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் -எம்.எல்.ஏ. கருணாஸ்

726

இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ் கூறியுள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், சாதி மோதல்களை தூண்டும் வகையில் பேசியதாக நுங்கம்பாக்கம் போலீசாரால் கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் 30 நாட்களுக்கு கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இதேபோல், ஐ.பி.எல் போராட்ட வழக்கிலும் கருணாசுக்கு 30 நாட்களுக்கு விசாரணை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை வேலூர் மத்திய சிறையில் இருந்து கருணாஸ் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், தம் மீது போடப்பட்ட பொய் வழக்குகளில் உண்மையும், நீதியும் வென்று இருப்பதாக தெரிவித்தார்.

இன்னும் ஆயிரம் வழக்குகள் தம் மீது போடப்பட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்றும் கருணாஸ் கூறினார்.

Advertisement