“எனக்கும் அந்த ஆசை இருக்கு” – ரகசியம் உடைத்த கங்குலி..!

705

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பின்னர், இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதில் முதன்மையானது பயிற்சியாளர். ரவி சாஸ்திரி மீது பல முன்னாள் வீரர்கள் அதிருப்தி வெளியிட, கேப்டன் கோலி ஆதரவுக் கரம் நீட்டினார்.

ரவி சாஸ்திரி மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

பயிற்சியாளர் பதவிக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்தாலும் அதில் பெரிய தலைகள் யாரும் இல்லாத காரணத்தால், மீண்டும் ரவி சாஸ்திரியே பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

இந்நிலையில், தனக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற கனவு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், `தாதா’ கங்குலி. கங்குலி, தற்போது பெங்கால் கிரிக்கெட் அசோஸியேஷனின் தலைவராகவும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் ஆலோசகராகவும், சர்வதேசப் போட்டிகளில் வர்னணையாளராகவும் இருக்கிறார்.

முன்னதாக அவர், பிசிசிஐ -யின் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இவரது காலகட்டத்தில்தான் ரவி சாஸ்திரி பயிற்சியாளராதத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது, கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவராக கபில் தேவ் இருக்கிறார். இவரது தலைமையிலான குழு, விரைவில் புதிய பயிற்சியாளரைத் தேர்வுசெய்ய உள்ளது.

இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கங்குலி, தனது பயிற்சியாளர் கனவுகள்குறித்து மனம்திறந்து பேசியிருக்கிறார்.

அவர், “நிச்சயமாக இந்திய அணியின் பயிற்சியாளராகச் செயல்பட ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், இப்போது கிடையாது. இன்னும் ஒரு கட்டம் செல்லட்டும். எதிர்காலத்தில் நிச்சயம் பயிற்சியாளருக்கான போட்டியில் எனது பெயரும் இருக்கும்.

தற்போது, கிரிக்கெட் தொடர்பான பல விஷயங்களில் இணைந்திருக்கிறேன். ஐபிஎல், பெங்கால் கிரிக்கெட், வர்னணை எனப் பல பணிகள் இருக்கின்றன. இந்தப் பணிகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக முடிக்க வேண்டும்.

ஒரு கட்டத்தில் நானும் முயல்வேன். நிச்சயமாக அதில் எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால், இப்போது இல்லை என்பதை மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும்” என்றார்.

கங்குலியின் இந்தக் கருத்து, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் கங்குலிக்கு நிச்சயம் முன்வரிசையில் இடமுண்டு.

ஆலோசகராகவும் இளம் டெல்லி அணிக்கு பெரும் நம்பிக்கை அளித்தவர். அதனால், ‘இந்திய அணிக்கு `தாதா’ -வின் தேவை கட்டாயம்’ என கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிட்டனர் ரசிகர்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of