லட்சக் கணக்கான ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

221

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நிசார் அஹமது. இவரது மகளுக்கு அப்போதைய போக்குவரத்துத் துறை துணை செயலாளரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான மோகன் ராஜ் மற்றும் அவரது உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர்.அதற்காக 50 லட்சம் ரூபாய் பணமும் கேட்டுள்ளனர். இதையடுத்து  நிசார் அஹமது 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தரவில்லை. இதையடுத்து நிசார் அகமது கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இதன் பிறகு தலா 25 லட்சம் ரூபாய்க்கான 2 காசோலைகளை மோகன்ராஜ் வழங்கி உள்ளார்.

ஆனால் அந்த இரு காசோலைகளும் பவுன்ஸ் ஆனதால் நிசார் அகமது அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து நிசார் அகமது உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய குற்றப் பிரிவினர் நம்பிக்கை மோசடி செய்தல் பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான மோகன்ராஜ் மற்றும் அவரது உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த வழக்கில்தான் மோகன்ராஜை மத்திய குற்ற பிரிவினர் தற்போது கைது செய்துள்ளனர்.மோகன்ராஜின் உதவியாளர் செல்வகுமார் மலேசியாவிற்கு தப்பி சென்றுள்ளதாகத் தெரியவந்ததை அடுத்து அவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் நாவப்பன் என்பவர் உட்பட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கிலும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ்க்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கும் சேர்த்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of