18 ரன் வித்தியாசத்தில் வெற்றி.. வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா..!

728

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று (திங்கள்கிழமை) இந்தியாவும் வங்கதேசமும் மோதின. பெர்த்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக தானியா பாட்டியா மற்றும் ஷஃபாலி வெர்மா ஆகியோர் களமிறங்கினர். தானியா 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஷஃபாலி வெர்மா சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு 17 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 39 ரன்கள் எடுத்தார்.

ஷஃபாலி வர்மா ஆட்டமிழந்த பிறகு இந்திய அணிக்கு அதிரடியான பாட்னர்ஷிப் அமையவில்லை. கேப்டன் ஹர்மன்பிரீத் 11 பந்துகளில் 8 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 37 பந்துகளில் 34 ரன்களும், ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 14 ரன்களும், தீப்தி சர்மா 16 பந்துகளில் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

வேதா கிருஷ்ணமூர்த்தி கடைசி கட்டத்தில் 4 பவுண்டரிகள் அடித்து 11 பந்துகளில் 20 ரன்கள் குவிக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது.

வங்கதேச தரப்பில் கேப்டன் சல்மா காதுன் மற்றும் பன்னா கோஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து, 143 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி வங்கதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஷமிமா 2-வது ஓவரில் ஆட்டமிழக்க முர்ஷிதாவும், சன்ஜிதா இஸ்லாமும் ஓரளவு பாட்னர்ஷிப் அமைத்தனர். இதையடுத்து, இருவரும் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ஃபர்கானாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதனால், வங்கதேச அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதேசமயம், பூனம் யாதவ்வும் சிறப்பாக சுழல் ஜாலம் காட்ட வங்கதேசத்தின் நடுவரிசை பேட்டிங் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணித் தரப்பில் பூனம் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஷிகா பாண்டே மற்றும் அருந்ததி ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும், ராஜேஸ்வரி காயக்வாட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம், இந்திய மகளிர் அணி குரூப் ‘ஏ’ பிரிவில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of