போக்குவரத்து விதி மீறினால் ஒடவும் முடியாது, ஒளியவும் முடியாது, யாரும் தப்பிக்கவும் முடியாது

426

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிச் செல்லும் நபர்களைக் கண்டறிந்து வழக்குப் பதிந்து அவர்களின் முகவரிக்கே சம்மனும், அபராத ரசீதும் அனுப்பும் திட்டம் சென்னை முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, நடந்த குற்றத்துக்கு உடனடியாக உண்மைக்குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன என, ‘மூன்றாவது கண்’ எனும் பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

வணிக நிறுவனங்கள், குடியிருப்புக்கள், சாலைகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் இதுவரை சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த பகுதி காவல்நிலைய எல்லையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில காவல் நிலைய எல்லைகள் 100 சதவீத சிசிடிவி கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து காவல்நிலைய எல்லைகளும் 100 சதவீத கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்