சென்னை ஐ.ஐ.டி மாணவி மரணம் தொடர்பான விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்..! – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

206

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்திருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி பெண்கள் விடுதியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பாத்திமா லத்தீப்(20). இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ மானுடவியல் படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி இரவு தனது அறைக்குள் சென்றவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியை, அவரின் தாய் செல்போனில் நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் பதட்டம் அடைந்தவர், 9-ம் தேதி காலையில் பக்கத்து அறையில் உள்ள மாணவியை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார்.

அந்த மாணவி பாத்திமாவின் அறைக்கு சென்று பார்த்தபோது, கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்க, போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது மாணவி பாத்திமா தூக்கில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், மாணவியின் மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நேரில் சென்று விசாரணை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சிபிஐ கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் விசாரணைக்குழு செயல்படும் எனவும், ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி பிரபாகரன் விசாரணைக்குழுவில் இருப்பார் எனவும், விசாரணை அதிகாரியாக கூடுதல் ஆணையர் மெகலினா செயல்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.