லிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை

1621

இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவருடைய சகோதரியைப் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டியுள்ளதாக அவருடைய தந்தை குறிப்பிட்டுள்ளார்.

சிபிஎஸ் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் தன்னுடைய பியானோ திறமையை வெளிப்படுத்தி உலகளவில் கவனம் ஈர்த்தார்
சென்னையைச் சேர்ந்த 13 வயது லிடியன் நாதஸ்வரம். அந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் லிடியன் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 6 கோடியே 96 லட்சம்
பரிசுத்தொகையை வென்றார்.

2 வயது முதல் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கிய லிடியன், தற்போது மொசார்ட், பீதோவன் ஆகியோரின் இசைக்குறிப்புகளை பியானோவில் நன்கு வாசிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவரால் தற்போது 14 இசைக்கருவிகளை வாசிக்கமுடியும். பல நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்தச் சிறுவயதில் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.
நேரடியாகப் பள்ளிக்குச் செல்லாமல் 1-ம் வகுப்பு முதல் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் வழியாகக் கல்வி கற்று வருகிறார். இவருடைய அக்கா அமிர்த் வர்ஷினியும்
இசைக்கலைஞர். அவரும் பள்ளிக்குச் செல்லாமல் ஓபன் ஸ்கூலிங் வழியாகக் கல்வியைப் பயின்று வருகிறார். லிடியனின் தந்தை வர்ஷன் சதீஷ் இசையமைப்பாளராக உள்ளார்.

அடுத்ததாக, இசையமைப்பாளராகவும் ஆகியுள்ளார் லிடியன். பிரபல மலையாள நடிகர் மோகன் லால் இயக்கும் Barroz என்கிற 3டி படத்துக்கு இசையமைக்கிறார் லிடியன்.

இந்நிலையில் லிடியன் மற்றும் அவருடைய சகோதரியைத் தொலைப்பேசி வழியாக இளையராஜா பாராட்டியுள்ளதாக லிடியனின் தந்தை சதீஷ் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார். அதில் அவர்
தெரிவித்ததாவது:

கடந்த 25 ஆண்டுகளாக என் இசை வாழ்க்கையை இளையராஜாவுக்கு அர்ப்பணிப்பு செய்து வருகிறேன். வாழ்வின் ஒவ்வொரு தருணமும் அவருடைய இசையைப் பழகியும் பாடல்களைப் பாடியும்
வருகிறேன்.

25 ஆண்டு கால தவத்தின் பயனை ஒரு தொலைப்பேசி அழைப்பில் அடைந்தேன். இசைஞானியிடமிருந்து வந்த விடியோ அழைப்பு இன்பத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.

என் குழந்தைகளின் திறமையைப் பாராட்டவே அவர் அழைத்தார். அதற்காக எங்களை நேரடியாக அவர் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. ஆனால் அழைத்தாரே! இசை விடியோக்கள்,
பதிவுகளைப் பார்த்து அழைத்துள்ளார். இன்னும் பெரிய அளவில் உயர வேண்டும் என அவர் வாழ்த்தினார். அந்த அழைப்பில் தாய் போன்ற பாசத்தையும் குழந்தை போன்ற சிரிப்பையும்
கண்டேன். தரிசனம் கிடைத்தது, பயனும் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

Advertisement