மழை, வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு

320

வடகிழக்கு மாநிலங்களில்  பெய்து வரும் கனமழை, வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான  மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் மழை, வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். அஸ்ஸாமில் மழை, வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

அஸ்ஸாமில் 28 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பாரபெட்டா மாவட்டம் மிகவும் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு 7.35 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மோரிகான் மாவட்டத்தில் 3.50 லட்சம் பேர் வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாள்களுக்கு அஸ்ஸாமில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பிரம்மபுத்திராவில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் உயிர்ச்சேதம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்குவங்கம், திரிபுரா, மிசோரம் மாநிலங்களில் பெய்துவரும் மழையால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.