ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரித்து கருத்து வெளியிடவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் பல்டி அடித்துள்ளார்.
அண்மையில் ரபேல் விவகாரம் தொடர்பாக பேசிய சரத்பவார், ரபேல் விவகாரத்தில் எந்த விதமான ஊழலும் நடைபெறவில்லை என்று கருத்து தெரிவித்தார்.
இதனால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தாரிக் அன்வர் என்பவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மராத்வாடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சரத்பவார், ரபேல் விமான ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடியை தான் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தார்.
விமானங்களின் விலையை அரசு ரகசியமாக வைத்திருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், ரபேல் தொடர்பான அனைத்து விவரங்களையும் மத்திய அரசு விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தவறினால் அரசின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.