தொடரை வெல்லுமா இந்தியா? மண்ணை கவ்வுமா ஆஸ்திரேலியா? நாளை தொடரும் பரபரப்பு

409

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற இரண்டு டி20-யில் 2 போட்டிகளையும் ஆஸ்திரேலியா தன்வசமாகிக்கொண்டது.
இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர்.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு ஆட்டத்திலும் இந்தியா வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை (8 ஆம் தேதி) நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இந்திய அணி திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி, கேதர் ஜாதவ், டோனி ஆகியோரும் பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது‌ ஷமி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தமிழக வீரர் விஜய் சங்கர் ஆல்ரவுண்டர் வரிசையில் சிறப்பாக செயல்படுகிறார். கடந்த போட்டியில் கடைசி ஓவரில் அவரது நேர்த்தியான பந்து வீச்சால் வெற்றி கிடைத்தது.தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலியாவுக்கு இருக்கிறது. இதனால் அந்த அணி வீரர்கள் அனைவரும் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், கம்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 134-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 133 போட்டியில் இந்தியா 49-ல், ஆஸ்திரேலியா 74-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of