சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ணக்கொடியில் பள்ளி மாணவர்களின் அசத்தல்..!

261

மூவர்ணக்கொடியின் அருமை மாணவர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் தெரியவேண்டும் என்று நினைத்த தனியார் பள்ளியின் முதல்வர் ஷேக் மகபூப் வித்தியாசமாக யோசித்தார்.

670 அடி நீள பிரம்மாண்டமான தேசியக்கொடியை உருவாக்கி அருப்புக்கோட்டை நகரம் முழுவதும் மாணவர்களைக் கொண்டு ஊர்வலமாக வரச்செய்தார்.

தேசப்பற்றும் தேசியக்கொடியைப் பற்றிய விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த ஊர்வலம் நடைபெற்றது என்கிறார் முதல்வர் ஷேக் மகபூப். நாடு முழுவதும் நேற்று 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. பள்ளி தாளாளர் முகம்மது யூசுப் தலைமை ஏற்று நடத்திய இந்த விழாவிற்கு வந்தவர்களை முதல்வர் ஷேக் மகபூப் வரவேற்றார். தேசியக்கொடி ஏற்றப்பட்டு உற்சாகமாக தேசிய கீதம் மாணவர்களால் பாடப்பட்டது.

மூவர்ணக்கொடியை சட்டையில் குத்துவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் 670 அடி நீளத்தில் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் ஜமாத் ஹாஜி மு. சிக்கந்தர், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர காவல் ஆய்வாளர் பலமுருகன் உள்ளிட்டோர் மாணவர்கள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதனை கைகளில் ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் ஊர்வலத்தில் சென்றனர். பள்ளியில் துவங்கிய ஊர்வலம் ரயில்வே பீடர் சாலை, மதுரை சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் வந்து நிறைவடைந்தது.

சுதந்திர தினநாளில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட பேரணி மாணவர்களை மட்டுமல்லாது பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்தது. இந்த பேரணியில் பிற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றது சிறப்பம்சம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of