காஷ்மீர் : இந்தியா – பாகிஸ்தான் அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை – ஐ.நா. குற்றச்சாட்டு

302

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காஷ்மீர், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐநா மனித உரிமை ஆணையம் கடந்தாண்டு ஜூனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையம் அறிக்கை வெளியிட்டது அதுவே முதன் முறையாகும்.

இந்நிலையில், அதேபோன்று கடந்த 2018 மே முதல் 2019 ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் நடந்த மனித உரிமைகள் குறித்து ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது.

அந்த அறிக்கையில், `‘கடந்த 12 மாதங்களில் இப்பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கடந்த பல ஆண்டுகளை விட அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

எனினும், அப்பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினர் விதியை மீறியதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், `காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் உறுதியான நடவடிக்கை எடுப்பதில் தோல்வி அடைந்துள்ளன’ என்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய அரசு கண்டனம்

ஐநா அறிக்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், `ஐநாவின் அறிக்கை தவறானது, உள்நோக்கம் கொண்டது. இது பழைய பொய்யான அறிக்கையின் தொடர்ச்சியே. பாகிஸ்தானிலிருந்து நடத்தப்படும் எல்லை கடந்த தீவிரவாதம் பற்றி அதில் குறிப்பிடவில்லை.

இது இந்தியாவின் இறையாண்மைக்கும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. இந்த அறிக்கை, உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டையும், எல்லை கடந்த தீவிரவாதத்தையும் வெளிப்படையாக ஆதரிக்கும் நாட்டையும் சமப்படுத்தும் முயற்சியாக தெரிகிறது. இதற்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது’ என்றார்.