உலகின் சக்திவாய்ந்த இராணுவங்களின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா ?

1765

இந்தியா சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் ஆகிவிட்டன, இத்தனை ஆண்டுகள் அண்டை நாடுகளிடமிருந்து, அல்லும் பகலும் நம்மை பாதுகாத்துவருவது நமது இந்திய இராணுவம். உலகின் சக்திவாய்ந்த இராணுவங்களின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதை, இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்…

உலகின் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடம் பெற்றுள்ளது.உலகளவில் 133 நாடுகளின் ராணுவ வளங்கள், இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவிசார் அம்சங்கள், மனிதசக்தி ஆகிய 50 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் குளோபல் ஃபயர் என்ற அமைப்பு உலகின் சக்தி வாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதில், இந்தியாவின் ராணுவ வலிமை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவற்றிற்கு அடுத்ததாக நான்காவது இடம் பிடித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 13-வது இடத்தில் உள்ளது.இந்தியாவிற்கு அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், பிரட்டன், ஜப்பான், துருக்கி, ஜெர்மனி, எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.

அமெரிக்காவை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வடகொரியா முதல் பத்து இடங்களில் கூட வராதது அந்நாட்டின் ராணுவத்தின் நிலையை பிரதிபலிக்கிறது. வரும் ஆண்டுகளில், ரஷ்யாவைப் பின்னுக்கு தள்ளி, சீனா இரண்டாம் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டாலும், கடந்த ஆண்டுகளில் 15-வது இடம் பிடித்த பாகிஸ்தான், தற்போது 13-வது இடத்தை பிடித்திருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதேபோல, ரஷ்யாவை விட அதிகளவு போர் விமானங்களும், போர்க்கப்பல்களும், சீனாவிடம் உள்ளன. ராணுவத்திற்காக அதிக நிதி செலவுகளை செய்து,தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்தும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது.

அந்த வகையில் டாப் 4-ல் இருக்கும் நம் இந்திய தேசத்தின் இராணுவ பலம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்..

  • இந்திய ராணுவம் 4,207,250 ராணுவ வீரர்களை கொண்ட நாடாக திகழ்கிறது.
  • இந்திய விமானப்படையில் 2102 விமானங்கள் உள்ளன.
  • 676 போர் விமானங்களை நமது இந்திய இராணுவம் கொண்டுள்ளது.
  • மொத்தம் இந்திய இராணுவத்தின் போர் டாங்கிகள் 4,426 ஆகும்.
  • நமது இந்திய கடற்படைக்கு 295 போர்க் கப்பல்கள் உள்ளன.

பாகிஸ்தானுக்கும் மேலான ராணுவ வலிமை இந்தியாவிடம் உள்ளது, அதே போல சீனா போன்ற நாடுகளின் இராணுவ வலிமைக்கு ஈடாக இந்தியா பலம் கொண்டுள்ளது.

நாட்டிற்காக அன்றாடம் எல்லைகளை பாதுகாக்கும் முப்படை வீரர்களுக்கு, சுதந்திரம் பெற்ற பொன்னாளில் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவிப்போம்…பெற்ற சுதந்திரத்தை போற்றுவோம்..

சத்தியம் செய்திகளுக்காக செய்திக்குழு!