கொரோனா பாதிப்பு..! ஈரானை விஞ்சி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தது இந்தியா..!

583

கடந்த 24 மணி நேரத்தில் 6,977 பாதிப்புகள் மற்றும் 154 இறப்புகள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 1,38,845-ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 4021-ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.

மொத்த பாதிப்புகளில், 57,720 பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் தற்போது 77,103 கொரோனா பாதிப்பினால் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மகாராஷ்டிரா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 50,231 மற்றும் 1,635 இறப்புகளாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

16,277 கொரோனா பாதிப்புகள் மற்றும் 111 இறப்புகளுடன் தமிழகம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் தமிழகத்திற்கு அடுத்தபடியாக 14,056 பாதிப்புகள் மற்றும் 858 இறப்புகள், டெல்லி (13,418 பாதிப்புகள், 261 இறப்புகள், ராஜஸ்தான் (7,028 பாதிப்புகள், 163 இறப்புகள்), மத்தியப் பிரதேசம் (6,665 பாதிப்புகள், 290 இறப்புகள்), உத்தரப்பிரதேசம் (6,268 பாதிப்புகள், 161 இறப்புகள்) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கைதொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மொத்த நிகழ்வுகளில் ஈரானை முந்தி உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிரா கடந்த ஏழு நாட்களில் ஒவ்வொரு நாட்களும் 2,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ஆம் தேதி விதிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கின் நான்காவது கட்டத்தின் கீழ் இந்தியா தற்போது உள்ளது. தற்போதைய ஊரடங்கு காலம் மே 31 அன்று முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,15,364 மாதிரிகள் புதிதாக வைரஸ் தொற்றுக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸின் மொத்தம் 28,34,798 மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களாக தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் மேலும் கூறியுள்ளது.

Advertisement