இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த அமைதி பேச்சுவார்த்தை ரத்து

780

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு, இந்திய பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்களால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது.

இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவிலும் முன்னேற்றம் இல்லாமல் காணப்படுகிறது.

அண்மையில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

அதில், இந்தியா – பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேச வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இந்த மாத இறுதியில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கும் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியை சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்காவில் நடைபெற இருந்த அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய வீரர் கொடூரமாக கொல்லப்பட்டது, காஷ்மீரில் மூன்று காவலர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது, பயங்கரவாதி புர்ஹான் வானிக்கு அஞ்சல் தலை வெளியிட்டது போன்ற காரணங்களால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் அவருடைய உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாகவும் ரவீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of