உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெறும் முக்கிய போட்டியில், இந்தியா – கனடா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறும்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. குரூப் சி-யில் இந்தியா, பெல்ஜியம், கனடா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள், ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் உள்ளன. இன்று நடைபெறவுள்ள போட்டியில் கனடாவை இந்திய அணி வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல, கனடா அணியும், இந்த போட்டியில் தோல்வியடைந்தால் உலக கோப்பையை விட்டு வெளியேற அதிக வாய்ப்புள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா – கனடா இடையே நடைபெற்றுள்ள 5 போட்டிகளில் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு டிரா மற்றும் ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.