வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி

833

ராஜ்கோட்: பிரத்வைதே தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில்
இன்று துவங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் பிரித்வி ஷா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே கேப்ரியல் பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து களமிறங்கிய புஜாரா, ப்ரித்வி ஷாவுடன் கை கோர்த்தார்.

இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை மிக சுலபமாக எதிர்கொண்டு அணியின் ரன்ரேட்டை உயர்த்தி வந்தனர். குறிப்பாக, அறிமுக வீரர் பிரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து அரை சதம் கண்டார். இதனிடையே மறுமுனையில் விளையாடி வந்த புஜாராவும் அரை சதம் காண மைதானத்திலிருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த பிரித்வி ஷா, தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அணியின் ஸ்கோர் 209 ஆக இருக்க புஜாரா (86 ரன்கள்) கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதன் பின்னர் கேப்டன் விராட் கோலி களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடி கொண்டிருந்த பிரித்வி ஷா (134 ரன்கள், 19 பவுண்டரிகள்) பிஷூ பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்நிலையில் 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரகானே, விராட் கோலியுடன் கை கோர்த்தார். மிக சிறப்பாக ஆடிய இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு அணியின் ரன்கணக்கை உயர்த்தியது. இதனிடையே நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த ரகானே (41 ரன்கள்) ரோஷ்டான் பந்துவீச்சில் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இதைத் தொடர்ந்து ரிஷாப் பாண்ட் மைதானத்தில் நுழைந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் சேர்த்தது. கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

Advertisement