இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 94/6

1092

ராஜ்கோட்: பிரத்வைதே தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அறிமுக வீரர் பிரித்வி ஷா துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மேலும் புஜாரா, கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது.

கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டி துவங்கியது முதலே அற்புதமாக விளையாடி வந்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

குறிப்பாக விராட் கோலி (139 ரன்கள்), ஜடேஜா (100 ரன்கள்) மற்றும் ரிஷாப் பாண்ட் (92 ரன்கள்) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலையை பெற்றது. இந்நிலையில் 9 விக்கெட்டுகளுக்கு 649 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 139 ரன்கள், பிரித்வி ஷா 134 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 100 ரன்கள் எடுத்திருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் பிஷூ நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரத்வைதே மற்றும் பவேல் ஆகியோர் களமிறங்கினர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் 7 ரன்னை எட்டுவதற்குள் துவக்க வீரர்கள் இருவரும் சமி பந்து வீச்சுக்கு இரையாக, அடுத்து களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்திய அணியினர் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், ரன் எடுக்க திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணி 74 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபத்திற்குள்ளாகியது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 555 ரன்கள் பின்தங்கிய நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்புடன் 94 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் சமி 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Advertisement