வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி 649 ரன்கள் குவித்து டிக்ளேர்

616

ராஜ்கோட்: பிரத்வைதே தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அறிமுக வீரர் பிரித்வி ஷா துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மேலும் புஜாரா, கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது.

கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

போட்டி துவங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதனால் இந்திய அணியின் ரன்வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது 24-வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த ரிஷாப் பாண்ட் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஜடேஜா, விராட் கோலியுடன் கை கோர்க்க இருவரும் பொறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

அணியின் ஸ்கோர் 534 ஆக இருக்கும் போது விராட் கோலி 139 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் ரன் சேர்க்க திணறினாலும், மறுமுனையில் ஆடிய ஜடேஜாவின் ருத்ர தாண்டவத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வாயடைத்து போனது. பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் விரட்டிய ஜடேஜா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்நிலையில் 9 விக்கெட்டுகளுக்கு 649 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 139 ரன்கள், பிரித்வி ஷா 134 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 100 ரன்கள் எடுத்திருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் பிஷூ நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisement