வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: சதம் விளாசிய விராட் கோலி

499

ராஜ்கோட்: பிரத்வைதே தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அறிமுக வீரர் பிரித்வி ஷா துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மேலும் புஜாரா, கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது.

கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

போட்டி துவங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதனால் இந்திய அணியின் ரன்வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

இந்நிலையில் மைதானத்திலிருந்த ரசிகர்களின் ஆரவாராத்திற்கிடையே 97வது ரன்னில் பவுண்டரி அடித்த விராட் கோலி சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு இது 24-வது சதமாகும். இதனிடையே மறுமுனையில் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டு வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்களில் (84 பந்துகள், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) பிஷூ பந்து வீச்சில் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதன்பின்னர் ஜடேஜா, விராட் கோலியுடன் கை கோர்த்தார். இந்திய அணி தற்போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 480 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of