இந்தியன் வங்கியின் கொள்ளை முயற்சி – 10 கோடி ரூபாய் தப்பியது

1081

திருவண்ணாமலை அருகே இந்தியன் வங்கியின் பின்பக்க ஜன்னலை உடைத்து வங்கி லாக்கரை உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கத்தை அடுத்த இறையூர் பகுதியில் இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் நோட்டமிட்ட மர்ம நபர்கள் வங்கியின் பின்புறம் உள்ள இரும்பு ஜன்னல் கம்பிகளை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் வங்கியின் சிசிடிவி கேமராக்களை செயலிழக்க செய்த மர்ம நபர்கள், கேஸ் சிலிண்டரை கொண்டு லாக்கரை வெல்டிங் செய்து உடைத்து எடுக்க முயன்றுள்ளனர். பாதிக்கும் மேலான இரும்பு தகடுகள் உடைக்கப்பட்ட போது கேஸ் சிலிண்டர்கள் காலியானதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதனால் லாக்கரில் இருந்த 10 கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் தப்பின. வங்கியின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி மற்றும் கைரோகை நிபுணர்கள் வங்கியில் ஆய்வு செய்தனர்.

Advertisement