புதிய சட்டக்கல்லூரிகளை தொடங்க இந்திய பார் கவுன்சில் தடை

202

நாடு முழுவதும் 3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகளை தொடங்க இந்திய பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இந்திய பார்கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நாடு முழுவதும் சுமார் ஆயிரத்து 500 சட்டக் கல்லூரிகள் உள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் மற்றும் சில மாநிலங்களின் மோசமான அணுகுமுறையால் கல்லூரிகள் முறையான உள்கட்டமைப்பு இல்லாமல் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதால், சட்டக்கல்லூரியின் தரம் குறைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளது. எனவே நாடு முழுவதும் 3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகளை தொடங்க தடை விதித்துள்ளது.

தேசிய சட்டபல்கலைக்கழகம் இல்லாத ஒரு மாநிலத்தில் புதிய சட்டபல்கலைக்கழகம் அமைக்க அந்த மாநிலம் முன்வந்தால் இந்த தடை பொருந்தாது. முன்னதாக தமிழகத்தில் மூன்று சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.