“இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் ஆபத்து” – பகீர் கிளப்பும் உலக வங்கியின் அறிக்கை..!

887

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6 சதவீதமாக குறைத்து மதிப்பீடு செய்துள்ள உலக வங்கி, இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து உள்ளது என எச்சரித்துள்ளது.

வங்கதேசம், நேபாளத்தை விடவும் இந்தியா பின்தங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது.

இந்த பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. ஆனால், இந்த வளர்ச்சி உண்மையில் 5 சதவீதமாகத்தான் உள்ளது என சமீபத்தில் ஒப்புக்கொண்டது.

இதுபோல், கடந்த வாரம் ஐஎம்எப் (சர்வதேச நிதியம்) தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய, அந்த அமைப்பின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா, ‘‘உலகில் 90 சதவீத நாடுகள் பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

அதில் இந்தியாவின் நிலைமை படு மோசம்’’ என கூறியிருந்தார். ஜெனீவாவில் உள்ள உலக பொருளாதார கூட்டமைப்பு, உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டில் கடந்த ஆண்டு 58வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 10 இடங்கள் பின்தங்கி 68வது இடத்தை பெற்றுள்ளது என தெரிவித்திருந்தது.

இந்திய பொருளாதாரம் ஏற்கெனவே நிர்ணயித்திருந்ததை விட மிக குறைவாக இருக்கும் என உலக வங்கி நேற்று தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கணிப்பை உலக வங்கி கடந்த ஏப்ரலில் வெளியிட்டிருந்தது.

அப்போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. ஆனால், அந்த அளவுக்கு வளர்ச்சி இருக்காது. 6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என நேற்று தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், அடுத்த நிதியாண்டில் இந்த வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், 2021-22 நிதியாண்டில் 7.2 சதவீதமாகவும் இருக்கும். வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியா பின்தங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்த நிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள உலக வங்கி, இவ்வளவுக்கு மத்தியிலும் இந்தியா வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து உலக வங்கியின் தெற்கு ஆசியாவுக்கான தலைமை பொருளாதார வல்லுநர் ஹன்ஸ் டிம்மர் கூறுகையில், ‘‘சமீபத்திய உலக பொருளாதார மந்த நிலையால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் பொருளாதார வளர்ச்சியை 6 சதவீதமாக குறைத்து கணித்துள்ளோம். நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் சராசரியாக 6.5 சதவீதமாக இருக்கும். சேவைத்துறைகள் வலுவாக உள்ளது, கட்டுமான துறைகள் வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி, மக்களிடம் பணப்புழக்கம் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது.

வங்கதேசத்தை பொறுத்தவரை நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 8.1 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இது அடுத்த ஆண்டில் 7.2 சதவீதமாகவும், 2021ல் 7.3 சதவீதமாகவும் இருக்கும். ஆனாலும், வேகமாக வளரும் பொருளாதார நாடாகவே இந்தியா திகழ்கிறது என்றார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரி குறைப்பு மற்றும் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதோடு, தொழில்துறைகள் மந்த நிலையில் இருந்து மீளும் வகையிலும், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக, வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதை கருத்தில் ெகாண்டு தொடர்ந்து 5வது முறையாக ரெப்போ வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 6.9 சதவீதத்தில் இருந்து 6.1 சதவீதமாக குறைத்து கணித்திருந்தது. ரிசர்வ் வங்கி அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகளும் கடன் வட்டியை குறைத்து வருகின்றன.

 

7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்திருந்தது.
ஆனால், அந்த அளவுக்கு வளர்ச்சி இருக்காது.
6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என நேற்று தெரிவித்துள்ளது.
வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியா பின்தங்கியுள்ளது.

அடுத்த நிதியாண்டில் இந்த வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், 2021-22 நிதியாண்டில்
7.2 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of