இந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா?

6183

இந்தியாவில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மணிலா கயிற்றின் பின்னணியில் பல்வேறு தகவல்கள் உள்ளன.

தூக்கிலிடுவதற்கு பயன்படும் மணிலா கயிறுகள் பிஹாரில் உள்ள பக்ஸர் சிறைச்சாலையில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. மத்திய தொழிற்சாலை சட்டப்படி, இந்த மணிலா கயிற்றினை பக்ஸர் சிறை தவிர வேறு எங்கும் தயாரிக்கக் கூடாது என்பது விதிமுறை. நாடு சுதந்திரம் அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தொடக்க காலத்தில், இந்தியாவில் தூக்கிலிடப் பயன்படும் கயிறு, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் தயாரிக்கப்பட்டு வந்தது.

பிறகு, பிஹாரின் பக்ஸரில் 1880-ம் ஆண்டு சிறைச்சாலை அமைக்கப்பட்ட பின்னர், 1884-இல் ஆங்கிலேயர்கள் அங்கு மணிலா கயிறு தயாரிக்கும் இயந்திரத்தை அமைத்தனர். அன்று முதல், இது மணிலா கயிறு எனப் பெயர் பெற்று விட்டது.

ரூ.2,120 விலை கொண்ட இக்கயிறு, இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் மிருதுவான பஞ்சில் ஈரப் பதத்துடன் தயாரிக்கப்படுகிறது.

சுமார் 18 அடி நீளத்தில் இந்த கயிற்றை தயாரிக்க பக்ஸர் சிறையில் தனியாக ஒரு பணியாளர் அமர்த்தப்பட்டிருந்தார். பிற்காலத்தில், இந்தக் கயிறுகள் சிறையில் உள்ள கைதிகளால் கைகளால் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த கைதிகள் விடுதலையாவதற்கு முன்பாக தங்கள் சக கைதிகளுக்கு அதற்கானப் பயிற்சியை அளித்து செல்வது வழக்கமாக உள்ளது.

தூக்கிலிடுவதற்காக மணிலாகயிறை முன்கூட்டியே தயாரித்துவைப்பது கிடையாது. குற்றவாளிகள் யாருக்காவது தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு அது ஓரளவுக்கு முடிவான பிறகே இந்த கயிறு பக்ஸர் சிறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த முறைதான், முதன்முறையாக ஒரே சமயத்தில் நான்கு மணிலா கயிறுகள் அனுப்ப உத்தரவிடப்பட்டிருக்கிறது.