தமிழகத்திற்கு ரெட் அலர்ட் : வானிலை மையம் எச்சரிக்கை

903

சென்னை: தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சுமார் 25 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என்பதால் தமிழத்திற்கு ரெட் அலர்ட் முறை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்தால் அந்த பகுதிகளில் ரெட் அலர்ட் முறை பிறப்பிக்கப்படும். மேலும் ரெட் அலர்ட் முறை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் மிக மிக மோசமான வானிலை நிலவும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும்.

மேலும் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் உயிரையும், உடமையையும் பாதுகாத்து கொள்ள வேண்டும். உள்ளூர் நிர்வாகம் மற்றும் அவசர நிலையை எதிர்கொள்ளும் அமைப்புகளின் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

இந்நிலையில் தமிழகத்தில் மழை அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நிவாரண முகாம்களை தயாராக வைத்திருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். அபாயகரமான பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் அழைக்கப்படும். ரெட் அலர்ட் முறை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

Advertisement