இந்திய கடற்படையில் கறுப்பாடுகள்?.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு..! – 13 பேரை மடக்கிய உளவுத்துறை..!

1063

இந்திய கடற்படையில் பாகிஸ்தானுக்கு உளவுப்பார்த்த வழக்கில்  13 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 20ம் தேதி கடற்படையில் உள்ள சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி இந்திய உளவுத்துறை முதற்கட்டமாக 7 பேரை கைது செய்தது.

மேலும் இந்த வழக்கில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய இந்திய உளவுத்துறை, பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கில் மொத்தம் 13 பேர் ஈடுபட்டுள்ளது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். இந்த வழக்கிற்கு இந்திய உளவுத்துறை`தேன் பொறி’ என பெயரிட்டுள்ளனர்.

இந்த தேசவிரோத செயலில் ஈடுபட்ட அனைவரும் 2015 க்குப் பிறகு கடற்படையில் சேர்ந்துள்ளனர்.  இதில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட மொத்தம் 7 பேரில் மூன்று குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரை சேர்ந்த சன்னி குமார், ஒடிசா மாநிலம் கோபால்பூரை  சேர்ந்த எஸ்.கே.தாஸ் மற்றும் உத்தபிரதேச மாநிலத்தை சேர்ந்த எஸ்.குமார் சர்மா விசாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதே போன்று ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த அசோக் குமார் , ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரை சேர்ந்த வி குமார் மற்றும் புனே மாநிலத்தை சேர்ந்த சோமநாத் ஆகியோர் கர்நாடகாவின் கார்வார் கட்டளையில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதில் ஒரு அசோக் குமார் மும்பையில் உள்ள கடற்படையில் உள்ள நீர்மூழ்கிக் கப்பலில் பணியமர்த்தப்பட்டவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட பணியாளர்கள், பேஸ்புக் மற்றும் ஆன்லைன் டேட்டிங் தளங்கள் மூலம் சிக்கியுள்ளனர் என்று உளவுத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றிய முக்கியமான தகவல்களுக்காக பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ கைது செய்யப்பட்டவர்களுக்கு பணபரிவர்த்தனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர இந்திய கப்பற்படையில் பணிபுரிந்த சதீஷ் மிஷ்ரா, தீபக் திரிவேடி, பஞ்கஜ் ஐயர்,ராகுல் சிங், சஞ்சய் ராவத்,தேவ் குப்தா, ஆகியோர் பாகிஸ்தானுக்கு உளவுப்பார்த்ததாகவும், பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறி இந்திய உளவுத்துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்படையில் உள்ளவர்களே நாட்டிற்கு எதிராக செயல்பட்டு உளவு பார்த்துள்ளதால், தீவிரவாதிகளிடம் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் இந்திய உளவுத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of